தேனி மாவட்டம் போடி குரங்கணி மலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ள நிலையில், ரூ.200 கொடுத்து அனுமதிச்சீட்டு பெற்றுத்தான் காட்டுக்குள் சென்றதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள், அந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 10 பேர் உயிரி ழந்துள்ள நிலையில, 27பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் பலரின் உடல்நிலை அபாயகரமாக உள்ள நிலையில், நேற்று அவர்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி ஆறுதல் கூறினார்.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி முதல்வர், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்றும், இதுபோல அனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட ஈரோடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், வனத்துறை சோதனை சாவடியில் ஒரு நபருக்கு 200 ரூபாய் வீதம் அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டுத் தான் காட்டுக்குள் சென்றோம் என்று கூறி உள்ளார்.
அரசும், வனத்துறையினரும் அனுமதி இல்லாமல் சென்றதாக கூறி வரும் நிலையில், டிரெக்கிங் சென்றவர்கள் 200 ரூபாய் அனுமதி சீட்டு பெற்று சென்றதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.