நடைபெற உள்ள பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளர் குப்பைத் தொட்டியில் அமர்ந்தும் சாக்கடை நீரில் படுத்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.இந்த மாதம் 25ஆம் தேதி பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 11800 பேர் போட்டி இடுகின்றனர். இவர்களில் கட்சி சார்பாக மட்டுமின்றி சுயேச்சைகளாகவும் பலர் களத்தில் இறங்கி உள்ளனர். வாக்கு சேகரிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. பல வேட்பாளர்கள் அனல் கக்கும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கராச்சி தொகுதியில் சுயேச்சையாக போட்டி இடுபவர் அயாஸ் மெமோன் மோதிவாலா. இவர் புதிய விதத்தில் வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார். தனது பலதரப்பட்ட புகைப்படங்களை சுவரொட்டிகளாகவும் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு ஆதரவு தேடி வருகிறார். அத்துடன் தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோக்களையும் வெளியிடுகிறார்.
அவ்வகையில் இவர் குப்பைத் தொட்டியில் அமர்ந்திருப்பது போலவும் சாக்கடை நீரில் படுத்திருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதற்கு அவர் தெருவெங்கும் குப்பைகள் கொட்டிக் கிடப்பதால் குப்பைத் தொட்டியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதால் அங்கு படுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் அந்த சாக்கடை நீரையே நேரடியாக குடிப்பது போல் லைவ் வீடியோ ஒன்றை பகிர்ந்து மக்களைக் கவர முயன்றுள்ளார்.
அரசியல் நோக்கர்கள் இது விளம்பர யுக்தி என விமர்சிக்கின்றனர். அத்துடன் இவருடைய முகநூல் பக்கத்திலும் இதை கிண்டல் செய்து பலர் பின்னூட்டம் இட்டுள்ளனர். இவர் தேர்தலில் வெல்வாரா தோற்பாரா என்பது யாருக்கும் இப்போது தெரியவில்லை. ஆனால் மற்ற வேட்பாளர்களை விட இவரை மக்களுக்கு அதிகம் தெரிகிறது என்பதே உண்மை.

