குட் டே – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : நியூ மோங்க் பிக்சர்ஸ்
நடிகர்கள் : பிருத்விராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், போஸ் வெங்கட், ‘மைனா ‘ நந்தினி, வேல ராமமூர்த்தி , பக்ஸ் பகவதி பெருமாள், ‘ஆடுகளம்’ முருகதாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : என். அரவிந்தன்
மதிப்பீடு : 2 / 5
தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி வெளியாகும் படைப்புகளுக்கு சில தருணங்களில் பாரிய வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வரிசையில் இடம் பிடிக்கும் படம் என்று வெளியீட்டிற்கு முன்னதாக ‘குட் டே’ படக் குழுவினர் உத்திரவாதம் அளித்ததால், பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு புதுமுக கலைஞர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா? இல்லையா ?என்பதை தொடர்ந்து காண்போம்.
குடும்பம் வேறு ஒரு இடத்தில் இருக்க .. அந்த குடும்பத்தின் தலைவர் அதாவது கதையின் நாயகன் தமிழகத்தின் தொழில் நகரம் என குறிப்பிடப்படும் திருப்பூரில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
குறைந்த ஊதியத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், தன்னுடைய நிறுவனத்தின் மேலதிகாரி ஒருவர் உடன் பணியாற்றும் சக பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். இதை கதையின் நாயகன் தட்டி கேட்க, அவருக்கு நிறுவனம் வழங்க வேண்டிய சம்பளத்தை நிறுத்துகிறது.
அத்துடன் அவருடைய நடவடிக்கை குறித்தும் எதிர்மறையான விமர்சனம் முன் வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார். குடும்பத்திற்கு மாத சம்பளம் என்பது அவசியம் என்பதால்.. வழக்கம்போல் அவமானத்தை தாங்கிக் கொள்கிறார் கதையின் நாயகன். சம்பளம் கிடைத்த பின் தன்னுடைய அவமானத்தை தாங்க இயலாமல்.. மன அழுத்தத்திற்கு ஆளாகி அதிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறுவதற்காக மது அருந்துகிறார். மது அருந்திய பிறகு அவருக்கு பழைய கல்லூரி காதலியின் நினைவு வருகிறது.
தன்நிலை மறந்து இரவு நேரத்தில் காதலியின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக நுழைய, அங்கு அதனால் சிக்கல் எழுகிறது. அதற்கு தீர்வு காண்பதற்காக காவல் நிலையத்தில் அந்தப் பெண்மணி புகார் கொடுக்க, காவல்துறை விசாரிக்கிறது.
அந்தத் தருணத்தில் காவல் நிலையத்தில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக புகார் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.
கதையின் நாயகனுக்கு காவல் துறையினரின் விசாரணை மீது அதிருப்தி ஏற்பட. காவலர்களுக்கு உரிய தகவல் தொடர்பு சாதன பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று விடுகிறார். இவரை காவல்துறையினர் கண்டுபிடித்து அவரிடம் இருந்து காவல்துறையின் பொருட்களை மீட்டார்களா? இல்லையா என்பதுதான் கதை.
மது பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் அந்த பழக்கத்தை கைவிடுவதற்கு ஒரு இரவு போதும் என்றும்.. அந்த இரவில் அவர் எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் சம்பவத்தை கண்டால் போதும் என்றும் அல்லது அதுபோன்ற துன்பியல் சம்பவத்திற்கு துணையாக இருந்தால் போதும் என்றும் இயக்குநர் விவரித்திருப்பது ஒரு பிரிவினருக்கு பிடித்திருக்கிறது.
யதார்த்தத்தை மீறாத கதை சொல்லல் என்றாலும் அவை முதல் பாதியில் மட்டுமே ரசிகர்களை வசீகரிக்கிறது. இரண்டாம் பாதியில் கதையின் பயணத்தை ரசிகர்கள் தீர்மானித்து விட .. அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக காட்சிகள் நகராததால் முதல் பாதி படம் அளித்த மனநிறைவு இரண்டாம் பாதியில் இல்லை.
முதல் பாதியில் கதையின் நாயகனின் கல்லூரி காலத்து தோழியான மைனா நந்தினியின் காட்சிகளும், இரண்டாம் பாதியில் மூவுருளி வாகனத்தை இயக்கும் சாரதியாக நடித்திருக்கும் காளி வெங்கட்டின் காட்சிகளும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
படத்தை தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிருத்விராஜ் ராமலிங்கம் மது அருந்துபவர்களின் உடல் மொழியையும், அவர்களின் உச்சரிப்பையும் அட்சரம் பிசகாமல் அளித்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன்னுடைய தோளில் சுமக்கும் போது பல இடங்களில் தடுமாறுவதையும் காண முடிகிறது.
ஒளிப்பதிவாளரே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பதால் காட்சிக்கான ஒளியமைப்பு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் பாடல்களில் இருக்கும் ஈர்ப்பு.. பின்னணி இசையில் மிஸ்ஸிங்.
குட் டே- உப்பு பாதி: இனிப்பு பாதி.