அளவுக்கதிகமான மதுபோதையால் திறந்து கிடந்த குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த புலியூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் மேலத்தெரு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தரைதள குடிநீர்த் தொட்டி ஒன்று உள்ளது. இதன் வாய்ப்பகுதி 2-க்கு 2-அடி அளவில் திறந்த நிலையில் இருந்துள்ளது. அந்தத் தொட்டி நிறைய தண்ணீரும் இருந்துள்ளது. இதனிடையே, இப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பாலன்(30) என்பவரை நெடுநேரமாக காணாது தேடியுள்ளனர். அவரது மனைவியும், உறவினர்களும் நேற்று மதியத்தில் இருந்தே அங்கும் இங்கும் அலைந்து தேடியுள்ளனர். அப்போது, அந்தத் பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்குத் திறந்திருந்த குடிநீர்த் தொட்டி மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சந்தேகத்திற்குட்பட்டு தீயணைப்பு துறையினர் குடிநீர்த் தொட்டியில் இறங்கித் தேடும் போது, பாலன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் அளவுக்கதிகமான மது போதையில் தொட்டிக்குள் தவறி விழுந்து, மூச்சுத்திணறி இறந்ததகாக கூறப்படுகிறது. மேற்படி சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல்நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தத் பகுதி இளைஞர்கள் சிலர், “பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ள தண்ணீர் தொட்டி என்றாலும், நெடுநாளாக இது திறந்தே கிடந்தது. சிறு பிள்ளைகளும், சிறுவர் சிறுமிகளும் இங்கே விளையாடும்போது, தவறி விழும் சுழல் இருந்தது. அதனால், திறந்து இருக்கும் இந்தச் தண்ணீர் தொட்டியை மூட ஏற்பாடு செய்யும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொன்னோம். அதுக்கு அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். ‘சரி அசம்பாவிதம் ஏதும் நடக்கிறதுக்குள்ள நாமளே அந்த திறந்த தண்ணீர் தொட்டியை மூட ஏற்பாடு செய்யலாம்’ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, அதற்குரிய ஏற்பாடுகளில் நாங்க இறங்குறதுக்குள்ள இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துட்டு. பாலன் எந்நேரமும் போதையிலே இருப்பார். அளவுக்கதிகமான போதை, அவரை இந்தச் தண்ணீர் தொட்டிக்குள் விழ வைத்து, அவரது உயிரையே காவு வாங்கிவிட்டது” என்று தெரிவித்தனர்.