சைட்டம் பல்கலைக்கழகத்தைத் தடை செய்யுமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியதைத் தொடர்ந்து அவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாகவும், சைட்டம் பல்கலைக்கழகத்தைத் தடை செய்யுமாறு கோரியும் கிழக்குப் பல்லைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைகக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், போலித் தீர்ப்பு வேண்டாம் சயிட்டத்தை இரத்துச் செய், பெற்றோர்களை அழித்து சைட்டத்தைப் பாதுகாப்பதா? ரணில் மைத்திரி தீர்வு உன் கையில் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்களுக்கு மேலாக மாணவர்கள் சைட்டம் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இக்காலத்தினுள் வைத்திய மாணவர்கள் தங்கள் வாழ்வைத் துறந்து சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை மூடுவதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மாணவர்கள் அவர்களின் எதிர்காலத்தைக் கொடுத்துப் போராடுகின்றார்கள். இது போன்ற பட்டக் கடைகள் எமது நாட்டுக்குத் தேவையில்லை. எமது நாட்டில் கல்வியை விற்க முடியாது என்கின்ற உரிமையைக் கோரும் போது இன்னும் இந்த அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ரணில் மைத்திரி அரசாங்கம் தூங்கிக் கொண்டிருந்துவிட்டுச் சொல்லுகின்றது நாங்கள் இந்த மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் என்று.
மக்களுக்குத் தேவையானவற்றை ஒருபோதும் இந்த அரசு கொடுத்ததில்லை. இந்த நாட்டின் ஏழை மக்களின் வரிப் பணத்தின் சுகபோகங்களை அனுபவித்து இறுதியில் மக்களை அவர்கள் கொடுக்கும் வரிப்பணத்திற்கு எற்றவாறான கல்வியைப் பெற முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளார்கள். இன்று வரை வைத்திய மாணவர்கள் வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். பிள்ளைகளின் போராட்டங்களைப் பார்த்த பெற்றோர்கள் அவர்களின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காதமையினால் தற்போது பெற்றோர்களே பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதற்கும் இந்த அரசினால் எவ்வித தீர்வும் இல்லை. இன்னும் இந்த ரணில் மைத்திரி அரசு தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. என்று தெரிவித்தார்கள்.