கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களின் நலன் கருதி தகவல் மையமொன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகமும்,ஆளுனர் அலுவலகமும்,ஊடகப்பிரிவும் இணைந்து இத்தகவல் மையத்தை உருவாக்கியுள்ளதாகவும் இத்தகவல் மையத்தின் பிரதானியாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடக செயலாளர் ஏ.எம்.ஹஸன் மற்றும் திட்டமிடல் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணியமூர்த்தியும் செயற்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தகவல் மையத்தில் கிழக்கு மாகாண சபைக்குற்பட்ட அனைத்து அமைச்சுக்களும்,திணைக்களங்களும் இணைந்து பொதுமக்களின் நலன்களில் அக்கறை கொண்டு அனைத்து தகவல்களுக்கும் பதில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களை நியமிக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.