கிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி – இரணைதீவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கொழும்பிலிருந்து சென்ற உயர்மட்டக் குழுவினர் சந்தித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை குறித்த குழுவினர் தற்போது சந்தித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் எஸ்.எஸ்.ரணசிங்க, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் பிரேமச்சந்திரன், கொமாண்டர் டி.எஸ்.ஏ.பி.சமரசிங்க, லெப்டிணன்ட் கொமாண்டர் எம்.கே.எம்.பெர்னாண்டோ ஆகியோர் விசேட விமானம் மூலமாக இரணைதீவு சென்றுள்ளனர்.
இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், புநகரி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சென்றுனர்.
இரண்டு தசாப்த காலமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இரணைதீவை விடுவிக்குமாறு கோரி, அம்மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வருவதோடு, கடந்த ஒருமாத காலமாக இரணைதீவிற்குள் சென்று போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் நோக்கில் இன்றைய சந்திப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

