இந்தியாவின் இருபது – 20 கிரிக்கெட் அணிக்கு தலைமைதாங்க கிடைத்ததையிட்டு பெருமை அடைவதாக நமிபியாவுக்கு எதிராக திங்களன்று (8) நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
துபாய் விளையாட்டரங்கில் நடைபெற்ற நமிபியாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்களால் இந்தியா வெற்றியீட்டியது.
அப் போடடி;யில் நமிபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றதுடன் இந்தியா 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 135 ஒட்டங்களைப் பெற்று வெற்யீட்டியது.
அப் போட்டியில் ரவிந்திர ஜடேஜா (12 – 2 விக்), ரவிச்சந்திரன் அஷ்வின் (20 – 3 விக்.) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் ரோஹித் ஷர்மா (56), கே.எல். ராகுல் (54 ஆ.இ.) சூரியகுமார் யாதவ் (25 ஆ.இ.) ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்ளும் இந்தியாவின் இலவான வெற்றிக்கு வழிவகுத்தன.
இந்த வெற்றியுடன் இருபது 20 அணித் தலைவர் பதவியிலிருந்து விராத் கோஹ்லிக்கும் தலைமைப் பயிற்றுநர் பதிவியிலிருந்து ரவி ஷாஸ்திரிக்கும் இந்திய அணியினர் பிரியாவிடை வழங்கினர்.
இந்தப் போட்டியுடன் இ -20 அணித் தலைமைப் பதவியிலிருந்து விடைபெற்ற கோஹ்லி, டெஸ்ட் மற்றும் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிக்கவுள்ளார்.
‘இருபது 20 கிரிக்கெட் அணியின் தலைவராக பதவி வகித்தமை பெருமை தருகின்றது. எனினும் சகல விடயங்களும் சரியான கண்ணோட்டத்தில் அமையவேண்டும். எனது பணிச் சுமையை இறக்கிவைக்க இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என 2017 இல் தோனியிடமிருந்து தலைவர் பதவியை பொறுப்பேற்ற விராத் கோஹ்லி தெரிவித்தார்.
‘கடந்த 6 – 7 வருடங்களில் (கொவிட் காலம் நீங்கலாக) கிரிக்கெட் அரங்கில் நாங்கள் தொடர்ச்சியாக விளையாடிவந்துள்ளோம்.
அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது அதிகப்பட்ச திறமையை வெளிப்படுத்தினோம். எனது கிரிக்கெட வாழ்க்கை அதேபோன்று தொடரும். அதில் எவ்வித மாற்றமும் இருக்காது.
அதனை என்னால் செய்ய முடியாமல் போகும்போது நான் கிரிக்கெட் விளையாடமாட்டேன்’ என 33 வயதான விராத் கோஹ்லி தெரிவித்தார்.
டெஸ்ட் மற்றும் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை விராத் கோஹ்லி வெற்றிகரமாக வழிநடத்திவந்துள்ளார்.
ஆனால், 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவரால் அணியை சம்பினாக வழிநடத்த முடியாமல் போயுள்ளது.
இந்த வருடம் முற்பகுதியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியா தோல்வி அடைந்திருந்தது.
இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணித் தலைவர் பதவியிலிருந்தும் விராத் கோஹ்லி விடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விராத் கோஹ்லிக்கு பின்னர் இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் அணித் தலைவராக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இண்டியன் ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா 5 தடவைகள் மும்பை இண்டியன்ஸை சம்பியனாக வழிநடத்தியிரூந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]