காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பன்னாட்டு நீதிமன்றத்தை, பாகிஸ்தான் நாட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது, என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் செயலை எதிர்பார்க்காத பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை, பன்னாட்டு பிரச்சனையாக்க தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக காஷ்மீர் மாறிவிட்டதால், இந்த விவகாரத்தில், சீனாவை துணைக்கு அழைத்துக் கொண்டு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை நாடிய நிலையில், பாகிஸ்தான் மூக்குடைப்பட்டது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் பேசியபோதும், பாகிஸ்தானின் முயற்சிகள் படுதோல்வி அடைந்தன. இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை, பன்னாட்டு நீதிமன்றத்திற்கு, பாகிஸ்தான் எடுத்துச் செல்ல உள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேசி, ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியை மேற்கோள்காட்டியுள்ளதோடு, மனித உரிமை மீறல்களை மையமாக வைத்து, பன்னாட்டு நீதிமன்றத்தில், பாகிஸ்தான் முறையிடப் போவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.