காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கோட்டா விட்டுக்குப் போ போராட்டத்தில் பங்கேற்பதற்கு தயாராகிவரும் வடமாகாண இளையோரிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
அதனடிப்படையில், காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக, சரணடைந்து காணாமலாகியோருக்காக, அரசியல் கைதிகளுக்காக இளையவர்கள் வடக்கில் அணிதிரள வேண்டும் என்பதாகும்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலில் தென்னிலங்கை இளையோர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட ஆட்சியாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்துகின்றார்கள். அவர்களின் போராட்டத்தினை மதிக்கின்றேன்.
ஆனால், இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு இளையவர்களும் அணி திரளவேண்டும் என்று யார்யாரோ அறிக்கை விடுகின்றார்கள். குறிப்பாக வடக்கு இளையோரை பங்கேற்கச் செய்வதற்கு முஸ்தீபுகள் செய்யப்படுகின்றன.
இந்த விடயத்தில் வடக்கு இளையவர்களிடத்தில் விநயமாக வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றேன். நாம் உரிமைகளுக்காக போராடி இலட்சக்கணக்கான சொந்தங்களை பலிகொடுத்துவிட்டு இருக்கின்றோம். இறுதியாக முள்ளிவாய்க்காலில் ஒருஇலட்சத்து நாற்பதாயிரம் பேரை பலிகொடுத்துவிட்டோம்.
யுத்த சூன்னியப் பிரதேசம் அமைக்கப்பட்டு அதற்குள் எம் மக்கள் வரவழைக்கப்பட்டு கொத்துக்குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டார்கள். 4இலட்சம் மக்கள் இருக்கையில் 70ஆயிரும் பேருக்கே உணவுகளை அனுப்பி ஏனையவர்கள் உண்ணுவதற்கு உணவின்றி உயிரைக் கொடுத்தார்கள். அதற்கான நீதி தற்போது வரையில் கிடைக்கவில்லை.
தென்னிலங்கையில் போராடுகின்ற எவரும், எமது மக்களின் உயிர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அவர்கள் போர் வெற்றியை கொண்டாடினார்கள். பாற்சோறு வழங்கி நடனமாடினார்கள். அவ்விதமான துன்பங்களை நாம் இலகுவாக மறந்துவிட முடியாது.
அதேநேரம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 1882நாட்களாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள். காலி முகத்திடலுக்கு புறப்படும் இளையோர் அங்கு செல்வதற்கு முன்னதாக இவர்களுக்காக குறைந்தது ஆயிரம் பேர் நாளொன்றில் திரள வேண்டும் என்று கோருகின்றேன்.
சிறைகளில் வாடும் எமது சொந்தங்களுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்றேன். நாம் எமது உரிமைகளுக்காவே போராடி வந்திருக்கின்றோம். ஆகவே பிற நலன்களுக்காக எமது இலக்கை இழந்து விடக்கூடாது என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]