காற்று மாசுபாட்டால் உலகில் வருடத்திற்கு 70 இலட்சம் பேர் உரிய காலத்துக்கு முன்பாக உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு முதன்முதலாக காற்றுமாசு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக சுகாதார அமைப்பு முதன்முதலாக காற்றுமாசு தொடர்பான அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சான்றுகள் அதிகரித்துள்ளன.
காற்று மாசு, மனித குல ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
காற்று மாசுபாட்டால் உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு 70 இலட்சம் பேர் உரிய காலத்துக்கு முன்பாக இறக்கிறார்கள்.
பெரியவர்களில் இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை வெளிப்புற காற்று மாசுபாட்டால் ஏற்படும் முன்கூட்டிய மரணத்துக்கு முக்கிய காரணங்கள் ஆகின்றன.
நீரிழிவு மற்றும் நரம்பு நோய்கள் போன்ற பிற விளைவுகளுக்கும் சான்றுகள் இருக்கின்றன. காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களின் ஆபத்து, புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றது என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வருடாந்த பி.எம்.2.5 க்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை ஒரு கன மீற்றருக்கு 10 மைக்ரோ கிராம் என்பதை 5 மைக்ரோ கிராம் அளவுக்கு குறைத்துள்ளது.
பி.எம்.10 க்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பு 20 மைக்ரோ கிராமில் இருந்து 15 மைக்ரோகிராம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
பி.எம்.2.5 என்பது காற்றில் உள்ள 2.5 மைக்ரோமீற்றர் விட்டம் கொண்ட நுண்துகள்கள் ஆகும். பி.எம்.10 என்பது 10 மைக்ரோமீற்றர். இந்த நுண் மாசுகள் மனிதர்களின் நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஆழமாக ஊடுருவிச்சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களின்படி காற்று மாசுபாடு அளவுகள் குறைக்கப்பட்டால், பி.எம்.2.5 தொடர்பான கிட்டத்தட்ட 80 சதவீத இறப்புகள் குறைக்கப்பட்டு விடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், காற்று மாசு தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது,
காற்று மாசடைதலினால் அதிகளவில் பாதிக்கப்படுகிற மக்களில் பெரும்பாலோர் மத்திய மற்றும் குறைவான வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.
உலக சுகாதார அமைப்பின் புதிய காற்று தர வழிகாட்டுதல்கள், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆதாரங்கள் அடிப்படையிலான மற்றும் நடைமுறை கருவி ஆகும்.
இதை நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போராடுகிற நாடுகள் அனைத்தும், துன்பங்களைக் குறைக்கவும், உயிரைக்காப்பாற்றவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]