கார்த்திகைத்தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் கடந்த வருடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கபபடுகின்றது என்று விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன், ‘அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கார்த்திகைத் தீபத்திருநாளை முன்னிட்டு மக்கள் தீபங்களை ஏற்றிக்கொண்டாடிய வேளையில், மாவட்டத்தின் சில இடங்களில் அதனைக் குழப்பும் இராணுவத்தினர் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று போரில் உயிரிழந்த உறவுகளின் நினைவிடங்களுக்குச் சென்று விளக்கேற்றி அவர்களை நினைவுகூருதல் பலவருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில், அண்மைக்காலத்தில் அதற்குத் தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் கார்த்திகைத்தீபத்திருநாளை முன்னிட்டு தீபங்கள் ஏற்றப்பட்டதால் குழப்பமடைந்த இராணுவத்தினர், தீபம் ஏற்றப்பட்டிருந்த சில வீடுகளுக்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வீரகேசரியில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,
‘கடந்த வருடமும் கார்த்திகைத்தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றது’ என்று விசனம் வெளியிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி ‘இதுதான் அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கமா?’ என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரது பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச்செய்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஜி.காசிலிங்கம், குறித்த செய்தியைக் களத்திலிருந்து எழுதிய ஊடகவியலாளருடன் தான் பேசியதாகவும் அம்பிகா சற்குணநாதனால் கூறப்படுவதைப்போன்று யாரும் ‘துன்புறுத்தப்படவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.
அப்பகுதிக்குப் பொலிஸார் சென்றதுடன் அங்கு நடைபெறும் விடயங்கள் தொடர்பில் மக்களிடம் விசாரித்ததாகவும் அதற்கு மக்கள் ‘இது இந்துக்களின் பண்டிகை’ என்று விளக்கமளித்ததாகவும் அதன்பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய தெளிவுபடுத்தலைப் பெற்றுக்கொள்வதாகவும் பிரதமரின் ஒருங்கிணைப்புச்செயலாளர் அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பின்னூட்டப்பகுதியின் ஊடாகப் பதிலளித்த அம்பிகா சற்குணநாதன், ‘வீரகேசரியில் வெளியான செய்தியை மேற்கோள் காண்பித்து நான் எனது பதிவைச் செய்திருக்கின்றேன். அதுமாத்திரமன்றி அங்குள்ள மக்கள் ‘விசாரிக்கப்பட்டதாகவே’ நான் எனது பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேனே தவிர, ‘துன்புறுத்தப்பட்டதாகக்’ கூறவில்லை.
மேலும் அப்பகுதியில் வாழும் நபர்களிடம் கேட்டுத்தெளிவுபடுத்திக்கொண்டதற்கு அமைய, இராணுவத்தினரே மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். எனவே உண்மையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை அல்லவா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள காசிலிங்கம், ‘பொலிஸார் தமது கடமைகளை முன்னெடுப்பதில் எந்தவொரு சிக்கலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இருப்பினும் அங்குள்ள மக்கள் விசாரிக்கப்பட்டதாக நீங்கள் கூறுவதனால் இதுகுறித்து ஆராய்கின்றேன். எது எவ்வாறெனினும் உங்களுக்குத் தகவல்களை வழங்கியவர்கள் உங்களது கட்சி ஆதரவாளர்கள் அல்ல என்று நம்புகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனை மறுத்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், தான் எந்தவொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினர் அல்ல என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]