தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டுமானால் மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்தல் ஆகிய 5 முக்கிய கேரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் உறுதி வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது ரெலோ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடக்க இருக்கும் நிலையில் தமது 5 நிபந்தனை களையும் ஏற்றால் மட்டுமே தமது கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாகத் தமது கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உதயனிடம் தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். காணி, பொலிஸ அதிகாரம் கையளிக்கப்படவேண்டும்.
அரசியல் கைதிகள் விடுதலை.
அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் காணிகள் டிசெம்பர் 31க்கு முன்னர் விடுவிக்கப்படவேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணும் வரைக்கும் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆகிய ஐந்து கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது ரெலோ.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைப்பதற்குத் தனது 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பர் என்று ஆதரவு தெரிவித்துவிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஆனால் இந்த முடிவை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கமுடியாது, அதன் ஒருங்கிணைப்புக் குழுவினரே எடுக்க முடியும் என்றுகூறிப் போர்க்கொடி தூக்கியது ரெலோ.
இதையடுத்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை இன்று கூட்டியிருந்தார்.
தமது 5 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ரணில் கையெழுத்திட்டால்தான், அவரது ஆட்சிக்கு ஆதவளிப்பது என்றும், அப்படியில்லையென்றால் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவளிக்கக்கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் தமது கட்சி வலியுறுத்தும் என்று சிறிகாந்தா தெரிவித்தார்.
கூட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமது கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான எந்த நடவடிக்கைக்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.