மேலதிகமாகக் காணிகளைப் பெறாமலேயே பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்த முடியும் என்று இந்திய ஆய்வுக் குழு கொழும்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பில் பலாலிக்கு வந்து நேரில் ஆய்வுகளை நடத்திய இந்தியக் குழுவினரின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
பலாலி விமான நிலையம் தற்போது உள்ளூர் மற்றும் படைத்துறை விமான நிலையமாக வுள்ளது. அதனைப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தலைமையில் ஏழுபேர் கொண்ட குழுவினர் பலாலிக்கு வந்து பார்வையிட்டு சாத்திய ஆய்வை மேற்கொண்டனர்.
அந்தக் குழுவின் ஆய்வு அறிக்கை தற்போது கொழும்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது உள்ளிட்ட பல விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பலாலி விமானத்தளம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டால், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் கொண்டு வரப்பட்டு, சிவில் விமான சேவைகள் நிறுவனத்தினால் விமான நிலையம் இயக்கப்படலாம்.
பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மேலதிக காணிகளைச் சுவீகரிப்பதற்கு மக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனவே ஓடுபாதையை விரிவாக்காமல், பலாலி விமானத் தளத்தைப் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் போக்குவரத்து மற்றும் பெரிய விமானங்களைத் தரையிறக்கும் வசதிகளைக் கருத்தில் கொண்டே, விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் காணி சுவீகரிப்புத் தொடர்பான சர்ச்சைகள் தொடர்வதால், பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்காமல் அதனை தரமுயர்த்துவதே தற்போதுள்ள தெரிவு என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமானத் தளத்தின் ஓடுபாதை 2.3 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. சுமார் 100 பயணிகளை ஏற்றக் கூடிய, போயிங்- 717 உள்ளிட்ட ஒடுங்கிய உடலமைப்பைக் கொண்ட விமானங்களை தரமுயர்த்தப்பட்ட பின்னர் தரையிறக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டது.