வவுனியா நகர மத்தியில் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை எழுதித்தருமாறு கோரிய பொலிஸாரை நகரசபைத் தலைவர் திருப்பியனுப்பியுள்ளார்.
நகரசபைக்குச் சொந்தமான குறித்த காணியில் நீண்ட காலமாக வவுனியா பொலிஸ் நிலையம் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் குறித்த காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு எழுத்தித்தருமாறு கோரி நகரசபைக்கு வந்த பொலிஸாரை வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் திருப்பியனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நகரசபை தலைவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், “வவுனியா நகரசபைக்கு சொந்தமான காணியில் நீண்ட காலமாக வவுனியா பொலிஸ் நிலையம் இயங்கி வருகின்றது.
இதனை விடுவிக்குமாறு பல தடவைகள் நகரசபையினால் கோரிக்கை விடப்பட்ட போதிலும் இதுவரை பொலிஸார் குறித்த காணியை விடுவிக்காது குறித்த காணியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் நகரசபைக்கு வருகை தந்த இரு பொலிஸார், குறித்த காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு எழுதி தருமாறும், பாரிய பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தமக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையினால் அதற்காகவே காணியை கோருவதாகவும் தெரிவித்தனர்.
எனினும் குறித்த காணியை எக்காரணம் கொண்டும் பொலிஸாருக்கு தரமுடியாது என நான் தெரிவித்துடன், வவுனியா மக்கள் குறித்த காணியை நகரசபை பெற்று அபிவிருத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிநிற்கும் போது இவ்வாறான செயலை செய்து மக்களுக்குத் துரோகம் செய்ய முடியாது என தெரிவித்து திருப்பியனுப்பிவிட்டேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

