கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஐ.நா.சபை காலந்தாழ்த்தாது தீர்வினைப் பெற்றுத்தருமாறு இப்போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்விடயங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐ.நா. மனிதவுரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னதாக எங்கள் துயரத்தை உங்களது அவதானத்துக்கு கொண்டுவருகின்றோம்.
கடந்த 2019 மே மாதம் போரின் முடிவில் எங்களில் பலர் குழந்தைகள் சிறார் உள்ளிட்ட எங்கள் குடும்பத்தினர் பலரை சிறிலங்கா பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தோம்.
அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராது என்று தரப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே அவர்களை ஒப்படைத்தோம். ஆனால் அவர்களிடம் ஒப்படைத்து பத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் எங்களால் கையளிக்கப்பட்டவர்களைப் பற்றி அரசாங்கத்திடமிருந்து பதில் இல்லை.
நாங்கள் தொடர்ந்து எங்கள் அன்புக்குரியவர்களைத் தேடியலைகின்றோம். சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளும் இராணுவ உளவுத் துறையும் சிறிலங்காவில் மட்டுமின்றி ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் செய்யும் அத்துமீறல் உள்ளிட்ட பற்பல தடைகளையும் மீறி எங்கள் தேடல் தொடர்கிறது.
இந்நிலையில் எமது உறவுகள் உயிரோடிருக்கிறார்களா? எங்கள் குழந்தைகள் என்ன ஆனார்கள்? எங்கள் புதல்வியர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனரா? அவர்களைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றனரா? என்ற மனவலியோடு வாழ்கின்றோம்.
சிறிலங்கா அரசாங்கம் பன்னாட்டுச் சமுதாயத்தையும் பாதிப்புற்றவர்களையும் ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது.
எனவே, “சிறிலங்கா விரிக்கும் “உண்மையும் மீளிணக்கமும்” போன்ற வலையில் விழுந்து விடாதீர்கள். சிறிலங்காவுக்கு எவ்வித கூடுதல் கால அவகாசமும் கொடுத்து விடாதீர்கள். கால நீட்டிப்புத் தருவது தமிழ் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் தங்கள் உரிமை மீறல்களைத் தொடர்ந்து செய்யவும், முக்கியமான போர்க்குற்ற சான்றுகளை அழிப்பதற்கும் உதவுவதாகி விடும். மேலும், கூடுதல் கால அவகாசம் கொடுப்பது தமிழர்களுக்கு நிரந்தரமாக நீதியை மறுப்பதாகி விடும்.
அத்துடன் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது சிறிலங்காவுக்கென்றே அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்புங்கள். போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், மனித உரிமை தொடர்பான ஏனைய சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை மனிதவுரிமைப் பேரவைக்கு அறிக்கை அளிப்பதற்கென சிறிலங்காவுக்கான சிறப்பு அறிக்கையாளரை அமர்த்துங்கள்” என்று குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.