ஹிக்கடுவ பகுதியில் காணாமற்போன 7 மீனவர்களைத் தேடும் பணிகளில் இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் விமானமொன்றும் மாலைதீவின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் சில படகுகளும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி சிந்தூர் என்ற மீனவப்படகு கடலுக்கு சென்றதாகவும் அதில் சென்ற மீனவர்கள் கடந்த 29 ஆம் திகதி வரை தமது உறவினர்களுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறுதியாக மீனவர்கள் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தபோது, அவர்களின் படகு மாலைதீவு கடற்பிராந்தியத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மீனவப்படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பத்மசிறி திசேரா குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையின் சுரக் ஷா எனும் கப்பல், மீனவர்களை தேடும் பணிகளில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காணாமற்போன மீனவர்களைத் தேடி தருமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி பிரதான வீதியின் ஹிக்கடுவை பகுதியில் மீனவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்டாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.