ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமற்போனோர் பணியகத்துக்கான ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு 19 மாதங்களின் பின்னர் அந்தப் பணியகத்துக்கான ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபாலவால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான சாலிய பீரிஸ் ஆணைக்குழுவின் தலைவராகவும், லியனகே, நிமல்கா பெர்னாண்டோ, பாதுகாப்புத் தரப்பின் சார்பில் வான் படையின் சட்டஆலோசகராகச் செயற்படும் மொகான் பி பீரிஸ், மட்டக்களப்பைச் சேர்ந்த ஜயதீபா, ரகீம் முல்லைத்தீவைச் சேர்ந்த வேந்தன் ஆகியோர் அரசமைப்புச் சபையினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் ஏழுபேருக்கும், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று நியமனம் வழங்கப்பட்டுள்ளதுகாணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு 11 மாதங்களின் பின்னரே அதனை நடைமுறைப்படுத்தும் அரசிதழில் அரச தலைவர் கையெழுத்திட்டார்.
இதன் பின்னர் பணியகத்துக்கான ஆணையாளர்களை, அரசமைப்புச் சபை நேர்முகத் தேர்வின் ஊடாகத் தெரிவு செய்திருந்தது. அரசமைப்புச் சபையின் முதல் பரிந்துரையில் ஜனாதிபதி சில திருத்தங்களை மேற்கொண்டிருந்தார்.
பின்னர் மீளவும் அரசமைப்புச் சபை ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைத்திருந்தது. அரசமைப்புச் சபை பரிந்துரைத்து ஒன்றரை மாதங்களின் பின்னரே, ஜனாதிபதி மைத்திரிபால நியமனம் வழங்கியுள்ளார்.