தமிழ் திரையுலகத்தின் பெருமைமிகு அடையாளமும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான தனுஷ் கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கர’ படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தோற்றம் குறித்த புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெளியானது. இதைத் தொடர்ந்து கதாபாத்திரங்களின் தோற்றம் தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள’ கர ‘ திரைப்படத்தில் தனுஷ், மமீதா பைஜு , கே. எஸ் .ரவிக்குமார் , கருணாஸ் , ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன் , சுராஜ் வெஞ்சரமூடு , எம். எஸ். பாஸ்கர், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுபூர்வமான வாழ்வியல் பின்னணியில் கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழு புதிய உத்திகளை கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை பற்றியும் , அதன் தோற்றத்தைப்பற்றியும் புகைப்படங்களாக வெளியிட்டனர்.
இதைத் தொடர்ந்து இது தொடர்பான பிரத்யேக காணொளியையும் தற்போது படக் குழு வெளியிட்டுள்ளது. இது வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்து வருகிறது.

