தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியம் குறித்தும், சிறந்த கல்வி வாய்ப்புகளையும் கல்வியின் தரத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்த இருக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார்.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தியத் திட்டங்கள் குறித்தும், குறிப்பாக பெருந்தோட்டப் பாடசாலைத் திட்டங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு எடுத்துரைத்தார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை (11) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியதோடு, கல்வித் துறைசார் அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் திட்டமிடல் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்களின் தேவையையும் அவர் வெளிப்படுத்தினார்.
தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியம் குறித்தும், சிறந்த கல்வி வாய்ப்புகளையும் கல்வியின் தரத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்த இருக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தியத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக, பெருந்தோட்டப் பாடசாலைத் திட்டங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
கல்வித் துறையில் தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்ற இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புப் பிரிவின் இரண்டாம் நிலை செயலாளர் அசோக் ராஜு, வணிகப் பிரிவின் முதலாம் நிலை செயலாளர் , கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

