வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை வங்கதேச பிரதமராக இருந்தபோது ஆதரவற்றோருக்கான அறக்கட்டளையில் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது கலிதா வங்கதேச தேசிய கட்சியின் தலைவராவார். மகன் மற்றும் 4 பேருக்கு இதில் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து டாக்கா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையில் கலிதா ஜியா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
அதில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள தேர்தலில் கலிதா ஜியாவால் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.