திகன உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியமைக்காக, கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் இராஜினாமா செய்ய வேண்டுமென புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கைப் பொறுப்புகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதம் நேற்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறையின் போது பொலிஸார் கைகட்டி வேடிக்கை பாரத்துள்ளனர். பொலிஸார் தமது துப்பாக்கிகளை பயன்படுத்தியிருந்தால் வன்முறையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். இதன்போது வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை.
பொலிஸாரின் முன்னிலையில் பள்ளிவாசல்கள் தாக்கி எரிக்கப்பட்டன. பொலிஸார் சரிவர செயற்பட்டிருந்தால் நிலைமை மோசமடையாமல் தடுத்திருக்கலாம். இது மிலேச்சத்தனமான நாடு என்ற அவமானம் சர்வதேச மட்டத்தில் ஏற்பட இந்த சம்பவம் காரணமானது. நாடு பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள நிலையில் இந்த கலவரம் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.