கறுப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வடக்கு, கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளுக்கு நீதி கோரியும், இனி இதுபோன்ற கொடூரங்கள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத்தின் அருட்தந்தையர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது “கறுப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”, “செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”, “தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்” என்கிற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.
சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் வடகிழக்கில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.






