தயாரிப்பு : யஷோ என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : வி. ஆர் . தினேஷ், ரேஷ்மா வெங்கட், மதுனிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுச்சாமி மற்றும் பலர்
இயக்கம் : முரளி கிரிஷ். எஸ்
மதிப்பீடு : 2 / 5
நடிகர் தினேஷ் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘கருப்பு பல்சர்’. தனித்துவமான நடிப்பிற்காக பெயர் பெற்ற தினேஷ் அவர் ஏற்று நடித்திருக்கும் இரண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசப்படுத்தி, ரசிகர்களை ரசிக்க வைத்தாரா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சென்னையில் குடிநீரை சுத்திகரிக்கும் சாதனத்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தசரத ராஜா ( தினேஷ்) எளிய மக்களுக்கான யதார்த்த வாழ்வில் சிக்கனமாக வாழ்கிறார். திருமணம் செய்து கொள்வதற்காக சுயவிவரத்தை திருமண தகவல் நிலையத்தில் பதிவு செய்திருக்கும் இவரை ஜானகி தேவி ( ரேஷ்மா வெங்கட்) என்ற இளம் பெண் தொடர்பு கொள்கிறார்.
இருவரும் சந்திக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானிக்கிறார்கள். காதலியின் கவனத்தைக் கவர்வதற்காக தன்னிடம் கருப்பு வண்ணத்தில் சொகுசான துவி சக்கர வாகனம் இருக்கிறது என சொல்கிறார். உடனே ஜானகி தேவி நாம் இருவரும் அதில் மகிழ்ச்சியாக பயணிக்கலாமா..! என கேட்க சரி என்று தலையாட்டி விட்டு வருகிறார்.
அதன் பிறகு தன் நண்பரான ஹரிஹரனு( பிராங்க் ஸ்டர் ராகுல்) டன் இணைந்து குறைந்த விலைக்கு கருப்பு பல்சர் எனும் சொகுசான துவி சக்கர வாகனத்தை தன்னுடைய தொழில் போட்டியாளரான காவேரி( மன்சூர் அலிகான்) யிடம் இருந்து வாங்குகிறார்.
அந்த சொகுசு துவி சக்கர வாகனத்தில் தசரத ராஜாவும், ஜானகி தேவியும் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக பல அவதானிக்க இயலாத அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகிறது. அது என்ன? என்பதும் அதனுடைய பின்னணி என்ன? என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
மதுரையில் வட்டி தொழில் செய்து வரும் செல்வம் ( அர்ஜெய்) என்பவருக்கு அடிக்கடி கருப்பு பல்சர் + காளை மாடு முட்டுவது போன்ற கனவு ஒன்று வருகிறது. இதனால் தன்னிடம் உள்ள கருப்பு பல்சர் எனும் வாகனத்தை சென்னையில் உள்ள காவேரி என்பவரிடம் கொடுத்து விடுகிறார்.
அந்த கருப்பு பல்சர் கதையின் மற்றொரு நாயகனான தசரத ராஜாவிடம் வந்து சேர்கிறது. அந்த வாகனத்தால் விபத்து ஒன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரியான வேல்ராஜ் ( ஷரவண சுப்பையா) விசாரிக்க தொடங்குகிறார்.
அதன் போது அவர் தசரத ராஜாவை சந்தித்த உடன் அதிர்ச்சி அடைந்து, நீங்கள் கருப்பன் ( தினேஷ்- 2) தானே? என கேட்கிறார். கருப்பனை பற்றி எதுவும் தெரியாத தசரத ராஜா அதிர்ச்சி அடைய ,கருப்பன் யார் என வேல்ராஜ் விவரிக்கிறார். இப்படி செல்லும் திரைக்கதையில் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் மட்டுமே சிறிய அளவில் சுவாராசியத்தை தருகிறது.
தசரத ராஜா – கருப்பன் என இரண்டு வேடங்களில் திரையில் தோன்றும் தினேஷ் …தன்னால் முடிந்த அளவிற்கு இரண்டு கதாபாத்திரங்களையும் நடிப்பின் மூலம் வித்தியாசப்படுத்தி நியாயம் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார். அதில் கருப்பன் கதாபாத்திரத்தில் சற்று சுறுசுறுப்பாக தோன்றுவதை ரசிக்க முடிகிறது.
ஜானகி தேவியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கட் இளமையுடன் அழகாக திரையில் தோன்றி ரசிகர்களை கவர்கிறார்.
ஹரிஹரன் கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர் பிராங்க் ஸ்டார் ராகுல் அடிக்கும் சில பஞ்ச் டொயலாக்குகள் சின்னதாக சிரிக்க வைக்கிறது.
இவர்களை தவிர்த்து சரவணா சுப்பையா, அர்ஜெய், மன்சூர் அலிகான் ஆகியோர்களும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
இன்பாவின் பின்னணி இசையும், பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும் சிறிய முதலீட்டு திரைப்படம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஜல்லிக்கட்டு காளை ஒன்று ஆவியாக துவி சக்கர வாகனத்தில் புகுந்து , தன்னை கொடூரமாக கொன்றவனை பழிக்கு பழி வாங்குகிறது என்ற சுவாரசியமான ஒன் லைனை வழக்கமான கொமர்சல் சட்டகத்திற்குள் அடக்கியதால்.. ரசிகர்களின் கவனத்தை மிக குறைவாகவே கவர்கிறது.
கருப்பு பல்சர் – பழுதான வாகனம்
