கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அளிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு ஒரு குழு அமைத்திருப்பதாக இல.கணேசன் கூறியதாக செய்தி வெளியான நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சியனரும் ஆதரவு தெரிவித்தனர்.
மு.கருணாநிதி – இல.கணேசன்
இந்த நிலையில் பா.ஜ.க.. மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், “கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அளிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு ஒரு குழு அமைத்திருக்கிறது” என்று கூறியதாக செய்தி வெளியானது.
தற்போது இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
குழு அமைத்திருப்பதாக தான் கூறியதாக வெளியான செய்தி குறித்து குறிப்பிடாமல், தான் பேசியதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேள்வி: கருணாநிதி அவர்களுக்கு பாரத_ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளதே?
பதில்: ஒருவர் மறைந்த உடனேயே அவரைப் பற்றி, அவர் செய்திருக்கிற பல நல்ல அம்சங்களைப் புகழ்ந்துரைப்பது என்பது இயல்பு. அது பண்பும் கூட.
நானும் கூட அது போல கலைஞர் அவர்களைப் பற்றி பத்திரிகைகளில் கட்டுரைகளாக, செய்தியாக, நானே நடத்தி வருகின்ற ஒரே நாடு பத்திரிகையிலும் கூட எழுதி இருக்கின்றேன். கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கூட அவரது பல விதமான நற்பண்புகள், குணங்கள். இதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.
அந்த வகையில் இப்படி ஒரு கோரிக்கை வந்திருக்கிறது. இதே போன்ற கோரிக்கை இன்னும் சில பேருக்கு வந்திருக்கிறது. இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசாங்கம் தான், மத்திய அரசாங்கம் இதற்காக அமைத்திருக்கிற குழுக்கள் தான். பொறுத்திருந்து பார்க்கலாம்.
~ இல.கணேசன்” என்று தனது முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து தான் விருதுநகரில் பேசிய வீடியோ காட்சியையும் பதிவிட்டுள்ளார்.

