திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும் முன்னால் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து அவ்வப்போது உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையை அடுத்து அவரது உடல் நிலை சீராகி வருவதாக இரவு 9.50 மணிக்கு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அவருக்கு ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரத்த அழுத்தம் சீரானது.
கிருமி தொற்றைக் குறைக்க நடவடிக்கை: கருணாநிதியின் இதயத்துடிப்பு உள்பட அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகள் சீராகி வந்த நிலையில், சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றை நீக்குவதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்தனர். வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அங்கிருந்து மருந்துகள் தருவிக்கப்பட்டு, நோய் தொற்றைப் போக்குவதற்கும் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதியைப் பார்க்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் வந்து காத்திருந்தார். அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
கடந்த 2 நாள்களாக நலம் விசாரிக்க வந்த தலைவர்கள் யாரும் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரையே சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். ஆனால், முதல்முறையாக வெங்கய்ய நாயுடு, பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 1.20 லட்சம் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் எவ்வித இடையூறு ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கட்சித் தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காக்க வேண்டும் என்று திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

