தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95- ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நல உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.