கம்பி கட்ன கதை – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : மங்கத்தா மூவிஸ்
நடிகர்கள் : நட்டி நட்ராஜ், முகேஷ் ரவி, சிங்கம் புலி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், முருகானந்தம் மற்றும் பலர்.
இயக்கம் : ராஜ நாதன் பெரியசாமி
மதிப்பீடு : 2/5
நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் படம் என்பதாலும், ‘சதுரங்க வேட்டை’யை போல் இருக்கும் என்று படக் குழுவினர் வெளியீட்டிற்கு முன் விளம்பரப்படுத்தியதாலும் ,ரசிகர்கள் இப்படத்தைக் காண படமாளிகைக்குள் சென்றனர். அவர்களுக்கு படக் குழுவினர் மன நிறைவை அளித்தார்களா? இல்லையா ? என்பதை தொடர்ந்து காண்போம்.
வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து நான்காவது மாத சம்பளத்தை தனக்கு தரகு தொகையாக வழங்கினால் போதும் என்று நயமாக பேசி மக்களை ஏமாற்றுகிறார் அறிவழகன்( நட்டி நட்ராஜ்).
மக்களை விதவிதமாக தொடர்ந்து ஏமாற்றும் இவரிடம்.. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கண்டுபிடித்து தரவேண்டும் என காவல்துறை மற்றும் அரசியல்வாதி கூட்டணியினர் உதவி கேட்க.. வைரத்தை கண்டு பிடிக்கும் அறிவழகன்.. அதனை தானே வைத்துக் கொள்வதற்காக திட்டமிடுகிறார்.
இதனால் அவருக்கு பல சிக்கல்கள் உருவாகிறது. அந்த சிக்கலை தன்னுடைய வழக்கமான ஏமாற்றுத்தனமான நாடகத்தை நடத்தி வைரத்தை அடைந்தாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் ஜாலியான கதை.
பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் முதன்மையான நோக்கம் என்பதால்.. அதற்கேற்ற வகையில் லாஜிக்கே இல்லாத கதையை தெரிவு செய்து, அதற்கு கொமடி மேஜிக் முலாம் பூசி இருக்கிறார்கள்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் மலினமான பாலியல் சார்ந்த நகைச்சுவை காட்சிகளை இடம்பெற செய்து வெகுஜன பாமர மக்களை சிரிக்க வைக்கிறார்கள்.
சதுரங்க வேட்டைக்குப் பிறகு இதுபோன்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், ‘அறிவானந்தா’ என்ற சாமியார் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.
இவருக்கு சீடராக வரும் சிங்கம் புலி, நண்பனாக வரும் முகேஷ் ரவி, அவருடைய காதலியாக வரும் ஷாலினி, பூனை சுல்தான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோதண்டம் என கொமடிக்காகவே எழுதி இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தங்களின் உடல் மொழியாலும், உரையாடலாலும் சிரிக்க வைக்கிறார்கள். ரசிக்க வைக்கிறார்கள்.
பாடல்கள் – படமாளிகையில் மட்டும் கேட்டு ரசிக்கும் ரகம். ஒளிப்பதிவு – வழக்கம் போல் நகைச்சுவை படங்களுக்கானதாக அமைந்திருக்கிறது.
கம்பி கட்ன கதை – பொழுது போகாதவர்களுக்கானது.