தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் கனடா, பிரித்தானியாவில் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
அதனடிப்படையில், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குச் சென்றுள்ள சுமந்திரன் எம்.பி. சாணக்கியனுடன் இணைந்து ஸ்காபெரோவில் கனடிய வாழ் புலம்பெயர் தரப்பினருடன் நேற்றைய தினம் சந்திப்பை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து இன்றும் மேலும் சில தரப்பினருடன் சந்திப்புக்களை இருவரும் கூட்டாக இணைந்து நடத்தவுள்ளனர். அத்துடன் கனடிய தமிழ் காங்கிரஸும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
இதேவேளை, இன்று இரவு கனடாவிலிருந்து மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ள சுமந்திரன் அங்கு அமெரிக்காவின் மேலும் சில பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளார்.
சில சந்திப்புக்கள் மெய்நிகர் வடிவிலும் நடைபெறவுள்ளது. இவை அனைத்தும் வொஷிங்டனை தளமாகக் கொண்டு நடைபெறவுள்ளன. இத்துடன் அமெரிக்காவுக்கான சந்திப்புக்கள் அனைத்தும் நிறைவுக்கு வரவுள்ளது.
அதன்பின்னர், சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்டவர்கள் மீண்டும் கனடாவுக்குச் செல்லவுள்ளனர். அங்கு எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கனடிய வெளிவிவகார தரப்பினரை ஒட்டோவாவில் சந்திக்கவுள்ளனர்.
அச்சந்திப்புடன், கனடிய சந்திப்புக்கள் நிறைவுக்கு வருவதோடு தொடர்ந்து குறித்த குழுவினர் பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளனர். அங்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், உலத்தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்கள் மற்றும் சில புலம்பெயர் தரப்பினர் ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர். அத்துடன் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா பயணங்களை நிறைவு செய்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு இலங்கை திரும்பவுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]