உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையும் காணப்படுகிறது.
ஈழத்தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும்.
குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது.
ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை
இந்த நிலையில் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை குறிக்கும் வகையில் கனடாவின் பிராம்ரன் நகரில் நிறுவப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் காணப்படுகிறது.
இந்த நினைவுசின்ன நிர்மாணத்தை ஆரம்பம் முதல் எதிர்த்த சிறிலங்கா அரசாங்கம் கனடாவில் உள்ள தனது உயர் ஸ்தானிகராலயம் மூலம் ராஜதந்திர அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களை விடுத்ததுடன் இது தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படக்கூடாது எனவும் எச்சரித்திருந்தது.

இனப்படுகொலை நினைவுச்சின்னம் என பெயரிடுவதால் இலங்கையில் நல்லிணக்க செயல்முறை சிதையும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் தற்போது இந்த நினைவுத் தூபி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். எனினும், இந்த எதிர்ப்பை எதிர்த்த கனடா தரப்புக்கள், தாங்கள் சரியான பாதையில் செல்வதாக நாமலை மேற்கோள்காட்டி எதிர்வாதங்களை முன்வைத்தது.
மேலும் நாமாலின் இந்த விடயம் குறித்து பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன் கருத்து தெரிவிக்கும் போது,தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை ராஜபக்சர்கள் எதிர்ப்பது, அதற்கு கிடைத்த கௌரவத்தின் சின்னம் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு, இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று உறுதியாக இருந்தால், ராஜபக்ச குடும்பத்தினர் நீதியைத் தடுத்து வழக்குத் தொடராமல் ஒளிந்து கொள்வதற்குப் பதிலாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று மேயர் பெட்ரிக் பிரவுன் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை விவகாரத்தை முழுமையாக கையில் எடுத்துள்ளனர்.
பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுனின் கருத்தென்பது அந்த அரசினுடைய கருத்தாக பார்க்கப்படுவதுடன், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை பிரயோகித்துள்ளது.