இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்த 19 வயதான சஜாஜ் ஜூனேஜா என்ற இளைஞன் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்துக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (21) அறையில் தூங்கிக்கொண்டிருந்த சஜாஜ் அடுத்தநாள் காலை வெகு நேரமாகியும் எழவில்லை. இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் சஜாஜை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ள நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இளைஞனின் சடலம் டொரன்ரோவில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞன் மரணித்ததற்கான காரணம் தெரியாத நிலையில் இளைஞனின் மரணத்தில் மர்மம் நிலவுவதால் சடலத்தை தாய் நாட்டிற்கு கொண்டுவர முடியாமல் தவிக்கின்றனர் சஜாஜின் பெற்றோர்.
இதுகுறித்து சஜாஜின் தந்தை இந்தர்ஜீத் கூறுகையில்:- 12 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி என் மகனை கனடாவிற்கு அனுப்பி வைத்தேன். கனடாவில் நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற அவனது கனவு சிதைவடைந்து விட்டது.
மேலும் எனது மகனின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவவேண்டும். இது தொடர்பாக அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என கூறினார்.