எமக்கு அடித்து, எம்மைப் பலவீனப்படுத்தி, அழிப்பதன் ஊடாக, பெற்றுத் தரப்பட்ட ஜனநாயகம், சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பவற்றை இல்லாமல் செய்து கண்ணீர் சிந்த தயாராக வேண்டாம் என ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகத் துறை நண்பர்களிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நான் இதனைக் கூறுவது, எம்மை தொந்தரவு செய்து எமது நடவடிக்கைகளை ஊடகங்களில் பிரச்சாரம் செய்யாத ஊடகங்களுக்கே ஆகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இன்று (23) காலை இடம்பெற்ற மொரகஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்துக்கு நீர் பாய்ச்சும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சில தனியார் ஊடக நிறுவனங்கள் எமது வாயிலிருந்து வெளிவரும் தேவையானவற்றையல்ல, தேவையற்ற விடயங்களை ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றன. மாலையானதும் தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் போது இந்த நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று இல்லையென்றே நினைக்கும் அளவுக்கு செய்திகளை வெளியிடுகின்றது.
நாட்டை அழிக்கும் விடயங்கள் மாத்திரமே ஊடகங்களில் காணப்படுகின்றது. இதனையிட்டு நான் கவலைப்படுகின்றேன். நான் இந்த நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தைப் பலப்படுத்தியதும், ஊடக சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்ததும் சத்தியத்தைப் பேசுவதற்காகும். சரியானதை உலகுக்கு வழங்குவதற்கு ஆகும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

