கண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 146 பேரை இதுவரை தாம் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கலவரத்தின் முக்கிய சூத்திரதாரி என்று நம்பப்படும் மகாசென பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரிடமும், 4ஆம் மாடியில் வைத்து சிறப்புப் பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
‘‘கண்டி வன்முறைகளுக்கு எங்கிருந்து இவர்களுக்கு நிதி கிடைத்தது என்பதை வெளிப்படுத்த ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதற்குச் சமாந்தரமாக வக்கிரமான முறையில் பின்னணியில் இருந்து வன்முறைகளுக்கு தலைமையளித்தவர்கள் தொடர்பிலும், இவர்களுக்கும் அரசியல் தரப்பினருக்கும் உள்ள தொடர்புகள் என்பன குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது’’ என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள் உள்ளிட்ட 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 120 பேர் வரையில் கண்டி மாவட்டத்தை சாராதவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.