கண்டியில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இனவாதத்துக்கு துணைபோனது கிடையாது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டுக்கு தீ மூட்டிவிட்டு நிலைமையை சரிசெய்ய உதவிட தயாரென சொல்வது விந்தையாகவுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர், அண்மைக்கால செயற்பாடுகளை நோக்கும்போது, சிலரது இரட்டை வேடம் வெளிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீல. சு. கட்சி சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களென ஒருபோதும் இனரீதியாக நோக்கியதில்லை. அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்த நாட்டைக் கட்டியெழுப்பவே அன்று எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க முதல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரை தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இந்த நிலையில் அண்மைக்காலச் சம்பவங்களுக்கு அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் குற்றஞ்சாட்டுவது பொருத்தமல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீல. சு. கட்சியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போது அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இம்மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர், நாடு மோசமான நிலையொன்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றாரே. அதற்கு அரசாங்கத்தின் பதிலென்ன? எனக் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டுக்கு தீமூட்டிவிட்டு அதன் பின்பு உதவிசெய்வோமென்பது விந்தையாகவுள்ளது என்றார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் என்றவகையில் இத்தகைய சூழ்நிலையில் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள விருப்பமாகவே உள்ளது. கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கும் கருத்துக்களுக்கும் செவிமடுக்க திறந்த மனதுடன் உள்ளது.
எனினும், நாட்டுக்குத் தீமூட்டிவிட்டு மீண்டுமொருமுறை மக்களைத் தூண்டிவிட்டு செய்யவேண்டியவை அத்தனையும் செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதென்பது எந்தவகையிலும் பிரயோசனமாகாது. திறந்த மனதுடன் எதைக்கேட்டாலும் நாம் அதற்கு செவிமடுக்கத் தயார்.
தற்போதைய பிரச்சினை மட்டுமல்ல நாடென்ற ரீதியில் எதிர்காலத்தில் முகங்கொடுக்கக்கூடிய சவால்களை திறந்த மனதுடன் சக கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராகவுள்ளேன்.
இதன்போது கேள்வியொன்றை எழுப்பிய ஊடகவியலாளரொருவர், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் காரணமா? என வினவினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்,
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதைவிடுத்து, அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் சில செயற்பாடுகளை நோக்கினால் உண்மை விளங்கும். அவர்கள் மக்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் அதன் உள்நோக்கங்கள் என்னவென்பதை ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும்.
நாட்டில் ஒரு மோசமான சூழ்நிலை உருவாகும்போது அதற்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுவதைவிடுத்து மிக மோசமான கருத்துக்களை முன்வைத்தமை சகலரும் அறிந்ததே.
அவர்கள் நடத்திய ஊடக மாநாடுகளில் அவர்கள் யாருக்கு எதிராக விரல் நீட்டுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் வித்தியாசமாக எதையும் செய்யப் போகவில்லை. இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு நல்லிணக்கத்துடன் தாய்நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
எனினும் அவர்களது வெளிப்பாடுகளில் குறுகிய அரசியல் நோக்கமே தென்படுகிறது. குரோதத்தையும் வைராக்கியத்தையும் விதைக்கின்றனர். மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது போல் கருத்துக்களை அள்ளி வீசுகின்றனர்.
கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களைப் பார்க்கும் போது திட்டமிட்ட ரீதியில் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சதியென இதைக் கூறமுடியும். ஐக்கிய நாடுகள் சபையில் அமர்வுகள் இடம்பெறும் காலங்களிலே கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அந்த அரசாங்கத்தின் உலக நாடுகள் நம்பிக்கையிழந்திருந்தன. இதற்குக் காரணம் நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியமையே. இது நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின் மீண்டும் உலக நாடுகள் இலங்கை மீது நம்பிக்கையை ஏற்படுத்தின. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று நாட்டில் இன ஐக்கியத்துடன் நல்லிணக்க அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள் என்று கோரியபோது அவர்கள் அதற்கு காலஅவகாசம் வழங்கியுள்ளனர். அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரது வேண்டுகோளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த நாட்டில் சமாதானத்தின் சகவாழ்வை ஏற்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.
இத்தகைய நிலையில் ஐ.நா. அமர்வுகள் இடம்பெற்று ஜனாதிபதி அதில் பங்குபற்றவுள்ள நிலையில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியென இக்கால சம்பவங்களை பார்க்க முடிகின்றதல்லவா. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் மக்களுக்கிடையில் பிரச்சினைகளும் முரண்பாடுகளும் இடம்பெற்றதுபோலவே இப்போது மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அதுபோன்று இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பதை உலகுக் காட்டும் முயற்சியே இந்த சம்பவங்கள் என்பது தெளிவாகின்றதல்லவா என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
