குருணாகலை – கொக்கரெல்ல பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொக்கரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை – தம்புள்ளை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கொக்கரல்ல வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ள அம்பியூலன்ஸ் வண்டி வீதியை விட்டுச்சென்று , தூண் ஒன்றில் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதியும் சாரதியின் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.
மெதகம-தெஹியத்தக்கண்டிய பகுதியைச்சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சாரதியின் உதவியாளர் பொல்கொல்ல வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

