முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கைது உட்பட பல்வேறு விசாரணைகளிலும், நீதிமன்ற செயற்பாடுகளிலும் அரச உயர்பீடத்திலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த 05 வருடங்களாக துன்புறுத்தல்களையே அவர்கள் செய்தார்கள். அவர்கள்தான் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளை அலரிமாளிகைக்கு அழைத்து, ஒவ்வொரு வாரமும் ராஜபக்சவினரை விசாரணைக்கு அழைக்குமாறும், விளக்கமறியலில் வைக்குமாறும் வழக்கு இல்லாவிட்டால் உருவாக்கிக் கொடுக்கும்படியும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரலும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான திணைக்களத்தின் முன்னாள் பிரதானியுமான சுஹத கம்லத் இதனைக் கூறியுள்ளார்.
அலரிமாளிகைக்கு வரவழைத்து சட்டத்தை வளைப்பது பற்றி ஆலோசனை கூறியுள்ளனர். அதில் அநுரகுமார, பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேபோல ஊழல் தடுப்பு ஆணைக்குழு முன்னாள் தலைவர் தில்ருக்ஷியும்கூட, இவர்களுடன் பணிசெய்ய முடியாது என்பதை தெரிவித்திருந்தார்.
மேலும் எவ்.சி.ஐ.டி முன்னாள் பிரதானி ரவி வைத்தியலங்காரக்கும் கடந்த ஆட்சியாளர்களால் அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதே சிந்தனையில்தான் அவர்கள் இன்றும் உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு கட்டமைப்பில் எந்தவொரு அரசியல் அழுத்தமும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. அலரிமாளிகையில் முன்புபோல பேச்சுக்களும் நடத்துவதில்லை.
கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுபவர்கள் அவர்கள்தான். தேர்தல் நெருங்குகையில் அதில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து அவர்கள் பொய்ப்பிரசாரங்களை செய்தார்கள். இறுதியில் முதலை கதையையும் வெளியிட்டார்கள்.
இந்நாட்டு மக்கள் அடிமுட்டாள்கள் என்று நினைத்த ராஜித சேனாரத்னவே இன்று முட்டாளாகிவிட்டார். இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு, நீதிமன்றம், இலஞ்ச தடுப்பு ஆணைக்குழு என்பன சுயாதீனமாக செயற்படுமானால் அதில் பிரச்சினையில்லை.
தங்களால் விதைத்ததையே அறுவடை செய்வார்கள். இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளது. 71களில் கலவரம், 88,89களில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதனால் மக்களின் நம்பிக்கை வீழ்ந்திருந்தது.
ஆனாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தற்போது இளைஞர்கள் இணைந்து நாட்டை அழகுபடுத்த தொடங்கியிருக்கின்றனர். அரசாங்கம் மீது நம்பிக்கை இருப்பதாக அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்” என கூறியுள்ளார்.

