வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர்.
பாலமோட்டை பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இரண்டு வாகனங்களை வழி மறித்துள்ளனர்.
எனினும் வாகனம் நிறுத்தாமல் சென்றதால் அதனை திரத்திச்சென்று தடையை (கல்ரொப்ஸ்) ஏற்படுத்தினர். இதனால் நிலைகுலைந்த சாரதிகள் வாகனங்களை வீதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை கடத்திச்செல்ல பயன்பட்ட இரண்டு கப் ரக வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றபட்ட முதிரை குற்றிகளை வனவளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.

