வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிப்பதற்காக வாடி அமைத்துள்ளோர், இந்த விவகாரத்துக்கு தீர்வு வரும் வரையில் கடலுக்குள் இறங்கவேண்டாம். அதனையும் மீறி இறங்கினால், வாடி எரிக்கப்பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தாலோ நாம் பொறுப்பாகமாட்டோம்.
இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வாடி அமைத்தோரை நேரில் சந்தித்து அறிவுறுத்தியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பது தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பின்னர் வாடி அமைத்திருந்த இடங்களுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கடற்தொழிலாளர் சங்கத்தினர், பொதுமக்கள் நேரடியாகச் சென்றனர்.தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோவில், குடாரப்பு இந்தப் பகுதிகளில் சுமார் 250 வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 400 பேர் வரையில் தங்கியிருந்து கடல் அட்டை பிடிக்கின்றனர். இவர்களை நேற்றுக் காலை 10.30 மணியளவில் நேரடியாகச் சென்று சந்தித்துப் பேச்சு நடத்தும்பேதே, மேற்கண்டவாறு அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபை உறுப்பினர், கடற்தொழில் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் வழங்கினர்.
கடலட்டை பிடிப்பதை நிறுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் ஒரு வார காலத்தில் முடிவு தெரியும். அது வரையில், தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்குள் இறங்கவேண்டாம்.
அதனையும் மீறி நீங்கள் கடலட்டை பிடிக்க கடலுக்குள் இறங்க, உங்களின் வாடிகள் எரிக்கப்பட்டு, அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று, கடலட்டை பிடிப்போரிடம் தெரிவித்தனர்.