பொலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கும் பெடியா எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.
‘ஸ்ரீ’, ‘பாலா’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் அமர் கௌஷிக் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பெடியா’. இதில் வருண் தவான் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் தீபக் தோப்ரியல், அபிஷேக் பேனர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஷ்ணு பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு சச்சின்-ஜிகர் இசையமைத்திருக்கிறார்.
கற்பனை கலந்து சாகச நகைச்சுவை ஜேனரில் அமைந்திருக்கும் இந்த படத்தை மேட்டாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்தப் படம் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதியன்று ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
‘பெடியா’ படத்தின் தமிழ்ப் பதிப்பின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.
முன்னோட்டத்தில் கதாநாயகனான பாஸ்கர் அடர்ந்த வனப் பிரதேசத்தில் சாகசப் பயணம் மேற்கொள்ளும்போது ஓநாயொன்று கடித்துவிடுகிறது.
அதன் பிறகு நாயகன் சிறிது சிறிதாக ஓநாயாக மாறுகிறான். அவனுக்கு ஓநாயின் குணங்களும் பழக்கவழக்கங்களும் ஏற்படுகின்றன. இதனை தெரிந்துகொள்ளும் அவர், தன் நண்பர்களின் உதவியுடன் அதிலிருந்து விடுபட்டாரா, இல்லையா என்பது தான் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியாவில் தயாராகியிருக்கும் முதல் ஓநாய் மனிதன் படம் இது என்பதாலும், சர்வதேச படைப்புகளுக்கு தரமான க்ரஃபிக்ஸ் காட்சிகளை முன்னணி நிறுவனம் வடிவமைத்திருப்பதாலும், இந்த படத்தின் முன்னோட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், “அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
புராண கதைகளில் வரும் ‘பெடியா’ எனப்படும் ஓநாயொன்றிடம் கடிபட்ட நாயகனை பற்றிய கதையிது. தியேட்டரில் கண்டு ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கொமடி, திகில் நிறைந்த இந்தியாவின் முதல் ஓநாய் பற்றிய இந்த படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.