ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில் பல கிராமப்புரங்களில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல இன்னலுக்கு மத்தியில் வாழுந்து கொண்டு இருக்கின்றனர்.
அதாவது நீண்டகாலமாக பாதைகள் திருத்தப்படாமல் இருக்கின்றது. குடிநீர் பிரச்சினை, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இம்மக்கள் நாட்டில் நடைபெறுகின்ற அனைத்து தேர்தலுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்தவை தோல்வியடைய செய்து மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினால், அவர்கள் கூட எந்ததொரு வேலைத்திட்டங்களையும் எமது பகுதியில் முன்னெடுக்கவில்லை என மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
கடந்த 20 வருட காலமாக ஆதரவு வழங்கி வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மக்கள் மிக விரக்கி அடைந்த நிலையில் உள்ளனர்.
எனவே இம்முறை அவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

