அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒப்பந்தம் ( எம்.சி.சி ) மற்றும் ( சோபா ) ஒப்பந்தங்களிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம் எதிர்ப்பு பேரணியில் ஈடுப்பட்டது.
கொழும்பு – காலி முகத்திடலிலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி இந்த பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு ஆர்பாட்ட பேரணியில் 100 இற்கும் அதிகமான பௌத்த பிக்குகள் கலந்து கொண்டதுடன், அமெரிக்காவிற்கு இலங்கையை அடிமைப்படுத்தும் எம்.சி.சி ,சோபா ஒப்பந்தங்களை கிழித்தெறி, அமெரிக்க -சீன போட்டியில் இலங்கையை சிக்கிக்கொள்ள இடமளிக்காதே , உலக யுத்தத்திற்கு இலங்கையை பலியாக்காதே என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் பேரணியில் பிக்குகள் கலந்துக்கொண்டனர்.
இதன் போது , ஆர்ப்பாட்டகாரர்களின் மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்லவ சிறிதம்ம தேரர் கூறுகையில் ,
ஆட்சிமாற்றம் ஏற்பட்டதே தவிர அவர்களுடைய கொள்கைகளில் எத்தகைய மாற்றங்களும் இடம் பெறவில்லை.கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் போது தற்போதைய அரசாங்க தரப்பினர் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
ஆயினும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தில் 70 வீத நன்மைபயக்கும் விடயங்கள் இருப்பதாக கூறிக்கொள்கின்றர்.
சீனா – இலங்கையை கைப்பற்றும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதற்கு போட்டியாக அமெரிக்கா ஒப்பந்தங்களின் ஊடாக நாட்டை கைப்பற்ற முற்படுகின்றது.
ஓப்பந்தங்களின் ஊடாக நாட்டின் வளங்களை விற்கும் வகையிவலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் உலக நாடுகளுடன் கைச்சாத்திட மாட்டோம் என கூறிக்கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆயினும் நாட்டிற்கு பாதகமான ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
இதன் காரணமாக அமெரிக்காவிற்கும் ,ஈரானுக்கும் இடையில் யுத்தம் ஏற்படும் பட்சத்தில் எமது நாட்டிற்கு பாதகமான விளைவுகள் ஏற்படும். ஆகவே ,இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை ,எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். அதனையும் மீறி அரசாங்கம் கைசாத்திடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் கிராமிய மட்டத்தில் மக்களை தெளிவு படுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.

