தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்து வரும் ‘ஆரியன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கே. பிரவீண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆரியன்’ என்னும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கே. செல்வராகவன், வாணி போஜன், ஜீவா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான விஷ்ணு விஷால் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பும் , படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை என்பதும், இவர் தயாரிப்பில் இந்த ஆண்டில் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ எனும் திரைப்படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் , இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியாகும் திரைப்படம் ‘ஆரியன் ‘ என்பதால், இதற்கு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.