ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.
பலுாசிஸ்தான் மாகாணத்தில் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, குல்பூஷணை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில், ஆப்கான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம், நியூயார்கில் நடந்தது.
இதில் ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி கலந்து கொண்டு பேசியது: பாகிஸ்தானால் கடந்த ஆண்டு இந்திய உளவாளியான குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டது, அந்நாட்டின் செயலை சந்தேகமின்றி நிரூபிக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் புகலிடங்களை ஏற்படுத்தி போதைப் பொருள் கடத்தல் மூலம் வருமானம் ஈட்டி வந்தால், அவர்களது செயல்களுக்கு வெளியில் இருந்து ஆதரவோ, நிதியுதவியோ தேவைப்படாது.
ஆதலால், ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும், இந்தப் பிரச்னைக்கு ஆப்கானிஸ்தானுக்குள் தீர்வு காண வேண்டும். அந்த சண்டைக்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பை பிற நாடுகளிடம் அளிக்கக் கூடாது. எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கும் நாடுகள், யதார்த்த நிலை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார் லோதி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கலந்து கொண்ட நாடுகள் மத்தியில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த நாடும் பேசவில்லை.