ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஆராயவுள்ளது.
அதற்கமைய அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் அலரிமாளிகையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஸ்தாபிக்கவுள்ள புதிய கூட்டணி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகள் என்பன தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை அறிவிப்பதிலேயே தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இன்றைய கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற குழு கலந்துரையாடலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ளனர்.
முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை சந்திக்கவிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

