ஐயோ எத்தனை கோடி கொடுத்தாலும் என்ர பிள்ளைகளுக்கு ஈடாகுமா? யாழில் கதறி அழுத தாய்.
ஐயோ…..நான் என்ர மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்திற்று நிற்கிறேனே, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் என்ர பிள்ளைகளுக்கு ஈடாகுமா? என கேட்டு தாயொருவர் அழுத காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது.
கடந்த-2009 ஆம் ஆண்டு மே மாத இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்ட தனது மூன்று பிள்ளைகளின் நிலை என்ன? எனக் கேட்டு ஒரு தாய் யாழில் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களையும் மிகவும் கலங்க வைத்தது.
வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் “ஜனாதிபதியைக் கேளுங்கள்” அலுவலகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திறந்து வைத்தார்.
இதன் போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போகச் செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயின் புலம்பல் இது,
“ஐயோ… எங்கட பிள்ளைகளை எங்கே வைச்சிருக்கிறீங்க? , ஐயோ…..எங்கட பிள்ளைகளை விடுங்கோ, ஜெனிவாவே, இவர்கள் சொல்லுறதெல்லாம் பொய், இவங்கட வார்த்தைகளை நம்பாதீங்க, இங்க எங்கட தாய்மார் அழுகிற கண்ணீரைப் பாருங்கோ, ஐயோ…ஆட்கள் கழுவுற மாதிரிக் கண்ணீர் ஓடுதே!, ஜெனிவாவே இந்த மார்ச் மாதம் எண்டாலும் எங்களுக்கு நல்ல தீர்வைக் கொடுப்பீங்களோ!.
நல்ல தீர்வைக் கொடுங்கோ… இப்பவும் எங்களுக்கு அநியாயம் தான் நடக்குது. நான் உண்மையெல்லாத்தையும் சொன்னால் என்னைக் கொண்டு போயிடுவாங்க, ஐயோ இனி என்னத்த நான் சொல்ல….என்னத்த நான் சொல்ல…., ஐயோ…எங்கட கண்கண்ட செல்வங்களக் கொடுத்தோமே!, ஐயோ…ஒரு பிள்ளையைப் பெற்று வளர்க்க எவ்வளவு பாடுபடுகிறோம்.
ஐயோ…..நான் என்ர மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்திற்று நிற்கிறேனே, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் என்ர பிள்ளைகளுக்கு ஈடாகுமா?
எங்களுக்கு நல்லது செய்வோம் என்று கூறித் தானே எங்களிடம் வாக்குகள் பெற்றீர்கள்…. அதன்படி எங்கட பிள்ளைகளை விடுங்கோ…எங்கட பிள்ளைகளை விடுங்கோ….எனக் கூறிக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
இதேபோன்று இன்னும் பல தாய்மார் காணாமல் செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளும், உறவுகளும் எங்கே? எனக் கேட்டுக் கதறி அழுதமை அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேவேளை, தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களும், அழுத்தங்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கதறல் ஒலிகளும் ஜெனிவாவில் எதிரொலித்து உரிய பதில் வழங்கப்பட வேண்டும்,நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே பலருடையதும் எதிர்பார்ப்பாகும்.