செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் ராஞ்சனா படத்தின் ஆன்மாவே போச்சு என நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டது. இதனால் தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் தனுஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான படம் ராஞ்சனா. இதில் தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெற்றி பெற்று பலரது பாராட்டுகளை பெற்றது.
இதே படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கிய இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றது. இந்த படத்தில் காதல், துரோகம், வலிகள் உள்ளிட்ட உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் சோகத்தில் முடிந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. இந்த நிலையில் கில்லி, பாட்ஷா உள்ளிட்ட படங்களை போல் இந்த படமும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் கிளைமாக்ஸில் சோகமான முடிவை நீக்கிவிட்டு ஏஐ மூலம் மகிழ்ச்சியான ஒரு கிளைமாக்ஸ்ஸாக படக்குழு மாற்றியுள்ளது. இது நடிகர் தனுஷையும் இயக்குநர் ஆனந்த்தையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
ஏஐ மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ராஞ்சனா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுவது எனக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.
இந்த மாற்றம் கிளைமாக்ஸ், படத்தின் ஆன்மாவையே அழித்துவிட்டது. எனது கடும் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படம் இல்லை.
திரைப்படங்களையும் படைப்புகளையும் ஏஐ தொழில்நுட்பம் கொண்டு மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது கதை சொல்லும் நேர்மையையும் சினிமாவின் பாரம்பரியத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. இது போன்ற செயல்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என நம்புகிறேன் என மிகவும் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.