தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த எஸ்.ஏ. இருபதுக்கு 20 லீக் கிரிக்கெட் தொடரில் குசல் மெண்டிஸ் அங்கம் வகிக்கும் பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்டுக்களால் வென்று சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டர்ன் கேப் அணி சம்பியனானது.
6 அணிகள் பங்கேற்றிருந்த இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியஸ் கெப்பிட்டல்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டர்ன் கேப் அணியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டன.
ஜோஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணி 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் குசல் மெண்டிஸ் (21) மாத்திரமே 20 ஓட்டங்களை கடந்த வீரராவார்.
சன்ரைசர்ஸ் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ரோஹெலொவ் வென்டர் மேர்வ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
137 ஓட்டங்கள் என்ற இலகுவான ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 16.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 4 விக்கெட்டுக்களால் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அடம் ரொசிங்டன் 30 பந்துகளில் 57 ஓட்டங்களை விளாசினார். இதில் 5 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
பந்துவீச்சில் அண்டிரிச் நோர்கியா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
சன்ரைசர்ஸ் அணி சம்பியன் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றிய ரோஹெலொவ் வென்டர் மேர்வ் போட்டியின் ஆட்ட நாயனாக தெரிவானார். இப்போட்டித் தொடரில் 366 ஓட்டங்களை குவித்ததுடன், 11 விக்கெட்டுக்களை வீழ்த்திய எய்டன் மர்க்ரம் தொடரின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, இப்போட்டித் தொடரின் 7 இன்னிங்ஸ்களில் மாத்திரம் விளையாடியிருந்த இலங்கை கிரிக்கெட் வீரரான குசல் மெண்டிஸ் 223 ஓட்டங்களை குவித்ததுடன், அவரின் சிறந்த ஓட்ட எண்ணிக்கை 80 ஆகும். இதில் 9 சிக்ஸர்களும் 27 பவுண்ரிகளும் அடங்குவதுடன், ஓட்ட குவிப்பு வேகம் 148.66 ஆகும்.