ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட எஸ் எல் சி. அழைப்பு இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ரெட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது.
இந்த சுற்றுப் போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றில் பிரகாசித்த வீரர்களுக்கு கிண்ணங்களுடன் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டது.
கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் எஸ் எல் சி புளூஸ் அணியை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டு எஸ் எல் சி ரெட்ஸ் அணி சம்பியனாகியிருந்தது.
இறுதிப் போட்டியில் புளூஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற ரெட்ஸ் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.
சம்பியனான அணிக்கு 10,00,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்துக்கு 750,000 ரூபா பணப்பரிசும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்ற ரெட்ஸ் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர், ஆட்டநாயகன் ஆகிய இரண்டு விருதுகளை தனதாக்கிக்கொண்டிருந்தார்.
இந்த இரண்டு விருதுகளுக்காக அவருக்கு முறையே 75,000 ரூபாவும் 150,000 ரூபாவுமாக மொத்தம் மொதம் 225,000 ரூபா பணப்பரிசு கிடைத்தது.
4 போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 206 ஓட்டங்களைப் பெற்று அதிசிறந்த துடுப்பாட்ட வீரரானார். அவர் மாத்திரமே இந்த சுற்றுப் போட்டியில் மோத்தமாக 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற ஒரே ஒரு துடுப்பாட்ட வீரராவார்.
புளூஸ் அணி வீரர் அஷேன் பண்டார, 4 போட்டிகளில் மொத்தமாக 134 ஓட்டங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
சுற்றுப் போட்டியில் புளூஸ் அணியின் ப்ரவீன் ஜயவிக்ரம 7 விக்கெட்களை வீழ்த்தி அதிசிறந்த பந்துவீச்சாளராக தெரிவானார். அவருக்கு கிண்ணத்துடன் 150,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் ரெட்ஸ் அணி வீரர் அசித்த பெர்னாண்டோ 4 போட்டிகளில் மொத்தமாக 10 வீக்கெட்களைக் கைப்பற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். அவர் 250,000 ரூபா பணப்பரிசை வென்றெடுத்தார்.
இந்த சுற்றுப் போட்டியில் 23 இலட்சத்து 75,000 ருபா மொத்த பணப்பரிசாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.