உலக வங்கியின் 70 மில்லியன் டொலர் நிதியுதவியுடன், லிட்ரோ நிறுவனம் 100 000 மெட்ரிக் தொன் எரிவாயுவை பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த தொகை எதிர்வரும் 4 மாதங்களுக்கு எரிவாயு விநியோகத்திற்கு போதுமானது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
லிட்ரோ நிறுவனமானது 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை வெற்றிகரமாக கொள்முதல் செய்துள்ளது.
இதன் மொத்த பெறுமதி 90 மில்லியன் டொலராகும். இதற்காக உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. மீதமுள்ள 20 மில்லியன் டொலர் லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகை நான்கு மாதங்களுக்கு நாட்டிற்கு வழங்க போதுமானதாக இருக்கும்.
இதில் 70 சதவீதம் உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் 5 மில்லியன் 12.5 கிலோ சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 கிலோ சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 கிலோ சிலிண்டர்கள் பெறப்படும். மீதமுள்ள 30 வீதமானவை வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
லிட்ரோ நிறுவனத்தினால் 20 மில்லியன் டொலர் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 33,000 தொன் எரிவாயுவின் ஆரம்ப தொகை இவ்வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளதோடு , அதன் பின்னர் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.