எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்னும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் விலை அதிகரிக்காமல் இருப்பதனால் ஒரு லீட்டர் டீசல் விற்பனையின் போது 50 ரூபா நட்டத்தையும்,ஒரு லீட்டர் பெற்றோல் விற்பனையின் போது 16 ரூபா நட்டத்தையும் கூட்டுத்தாபனம் எதிர்க்கொள்கிறது.
இவ்வாறான பின்னணியில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கடந்த 7ஆம் திகதி நிதியமைச்சிடமும்,வலுசக்தி அமைச்சிடமும் வலியுறுத்தினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளார்.ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை.விலை அதிகரிப்பு குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலைமையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் இருப்பது பாரிய நெருக்கடி நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது.நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெருக்கடி நிலைமையினை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலுசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
ரஷ்யாவிற்கும்,உக்ரேனுக்கும் இடையிலான பதற்ற நிலைமை மற்றும் அமெரிக்க மத்திய பரிவர்தனையினால் வட்டி வீதம் அதிகரித்தல் ஆகியவற்றினால் உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ப்ரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.3சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது அதற்கமைய ஒரு மசகு எண்ணெய் தாங்கியின் தற்போதைய விலை 94.44 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]